Dienstag, 11. Dezember 2012

உதயன்

11 டிசெம்பர் 2012, செவ்வாய் 8:35 மு.ப
எனது அப்பா எங்கே?
news
கடந்த பல ஆண்டுகளாகக் கைது செய்யப்பட்டும் இனம்தெரியாதோர் என்ற போர்வையில் கடத்தப்பட்டும் காணாமல் போகச்செய்யப்பட்ட உறவுகளை விடுவிக்கக்கோரி மன்னாரில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து கச்சேரி முன்பு காணாமல்போனோரின் உறவுகள் ஒன்றுகூடி தமது உணர்வுகளையும் ஆதங்கங்களையும் பகிர்ந்துகொண்டனர். அப்போது காணாமல் போனோரின் உறவுகள் அங்கு கண்ணீர்விட்டு கதறியழுதனர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற உறவுகள், "எனது அப்பா எங்கே?', "வெள்ளைவானும் அரசுதான் கடத்தியதும் அரசுதான்', காணாமல்போவதும் அரசாலே, கடத்திச் செல்வதும் அரசாலே', "தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்காதே! கொள்ளையிடாதே!' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பினர்.
காணாமல்போன உறவுகள் எங்கிருக்கிறார்கள் என்பது இதுவரை அறியப்பட முடியாமல்  உள்ளதுடன் அவர்கள் உயிருடன் உள்ளனரா, இல்லையா என்பது கூட இன்றுவரை மர்மமாகவே வைக்கப்பட்டுள்ளது.
சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்யப்பட்டவர்களை மறைத்து வைத்திருக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று சட்டம் கூறுகிறது. எனவே, அவர்களை மீள ஒப்படைப்பதோ அல்லது சட்டத்தின் முன்நிறுத்துவதோ கைதுசெய்த அதிகாரத் தரப்பின் ஜனநாயக ரீதியிலான கட்டாயக் கடமை. எனினும் இதுவரை இவர்கள் மீள விடுவிக்கப்படவோ சட்டத்தின் முன்நிறுத்தப்படவோ இல்லை.
எனவே, இவர்களை விடுவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கும்படியும் அவர்களில் குற்றம் இருந்தால் சட்டத்தின் படி நிறுத்தும்படியும் கோரியுமே இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தப்பட்டது.
இவ்வூர்வலம் மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயம் முன்பாக ஆரம்பித்து கச்சேரியை வந்தடைந்து பின்னார் ஜனாதிபதிக்கு அரச அதிபர் மூலமாக மகஜர் கையளிப்புடன் நிறைவடைந்தது.
இதற்கு முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் ஒன்றுகூடி காணாமல்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட செயற்குழு உறுப்பினர்களின் தலைமையிலே இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் காணாமல்போனோரின் குடும்ப உறுப்பினர்களும் யுத்த அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பலரும் பல நூற்றுக்கணக்கில் உணர்வு பூர்வமாகப் பங்குபற்றினர்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.